இந்த ஒரு பாவத்தை மறந்தும் செய்து விடாதே!

Do not forget this one sin!

அனைவருக்கும் வணக்கம் ஒருவன் எத்தனை கோவில்களுக்குச் சென்றாலும் எத்தனை கடவுள்களை வழிபட்டாலும் எவ்வளவு தான தர்மங்களை செய்தாலும் இந்த ஒரு பாவத்தை மட்டும் செய்துவிட்டால் அந்தத் தான தர்மங்களால் எந்த உபயோகமும் இல்லை. எந்தப் புண்ணியமும் கிடைக்கப் போவதில்லை. அது எத்தகைய பாவம் என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு ஆன்மீக கதை ஒன்றை இப்பொழுது பார்க்கலாம். இந்த ஒரு பாவத்தை மறந்தும் செய்து விடாதே!

நாம கோட்டை என்னும் ஊரில் ரத்தினம் என்பவன் வாழ்ந்து வந்தான். ரத்தினம் சொந்தமாகச் சிறிது விவசாய நிலங்கள் வைத்திருந்தான். சில வேலையாட்களை வைத்துக்கொண்டு அந்த நிலத்தில் விவசாயம் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தான். பெரிய கோடீஸ்வரனாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு வசதியாக வாழ்ந்து வந்தான் ரத்தினம்.

கடவுள் பக்தி மிக்கவன் தினமும் கோவிலுக்குச் செல்வான் தன் வீட்டின் பூஜையறையில் கடவுளுக்குப் பூஜை செய்து வழிபடுவான். பண்டிகை விசேஷ நாட்களில் கோவில்களில் அன்னதானம் செய்வான். கோவில் விசேஷங்களுக்குப் பண உதவி நன்கொடை அளிப்பான். ஆனால் ரத்தினத்திற்கு ஒரு பெரிய மனக்குறை அவனை வாட்டி எடுத்தது. அந்தக் குறை என்னவென்றால் அவனுக்குத் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் அவனுக்கும் அவனது மனைவிக்கும் குழந்தை பிறக்கவில்லை.

அவனும் பல ஊர்களில் உள்ள பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டான். தான தர்மங்களையும் செய்தான். ஆனாலும் அவனுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. சில சமயம் கடவுளை வணங்கும்போது தனது நிலைமையை எடுத்துக் கூறி மிகவும் வருந்துவான். இறைவனே ஏன் என்மீது கருணை காட்ட வில்லை. உன்மீது பக்தி கொண்ட எனக்கு உதவி செய்யக்கூடாதா எனக்குப் புத்திர பாக்கியம் கிடைக்க அருள் செய்யக் கூடாதா என்று அழுது புலம்புவான்.

இதையும் படிக்கலாமே: எந்தக் கடவுள் நல்ல கனவு எந்தக் கனவு கேட்ட கனவு.

நாட்களும் காலமும் ஓடிக்கொண்டிருந்தது ரத்தினமும் தினமும் கோவிலுக்குச் செல்வதையும் பூஜை புனஸ்காரங்களை செய்வதையும் நிறுத்தாமல் செய்துகொண்டிருந்தான். அப்போது மிகவும் சக்தி வாய்ந்த புகழ்பெற்ற துறவி ஒருவர் ஒவ்வொரு ஊராகச் சென்று அங்குள்ள கோவில்களில் ஆலய தரிசனம் செய்துவிட்டு அந்த ஊரிலே சில நாட்கள் தங்கி அங்குள்ள மக்களுக்கு ஆன்மீக உபதேசங்களையும் வாழ்வியல் உபதேசங்களையும் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

அந்தத் துறவியைப் பற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்தத் துறவி ஒருநாள் நாம கோட்டை ஊருக்கு வருகை தந்தார். அவர் அந்த ஊரில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு அந்த ஊரில் உள்ள ஒரு குடில் ஒன்றில் தங்கி இருந்தார். துறவி தங்கள் ஊருக்கு வருகை தந்ததை கேள்விப்பட்ட மக்கள் அனைவரும் அவரைப் பார்க்க வந்து உபதேசங்களையும் ஆசிகளையும் வாங்கி சென்று கொண்டிருந்தார்கள்.

இந்தத் துறவியைப் பற்றி ரத்தினமும் கேள்விப்பட்டான். மகாசக்தி வாய்ந்த அந்தத் துறவி நம் வீட்டிற்கு மட்டும் வருகை தந்தாலே நாம் செய்த பாவம் எல்லாம் விலகி நமக்கு நல்லது நடக்கும். அவரை எப்படியாவது நமது வீட்டில் ஒரு வேலையாவது சாப்பிட வைக்க வேண்டும். இதுவே நமக்குப் பெரிய புண்ணியம் ஆகிவிடும் என்று நினைத்தான் ரத்தினம். பிறகு மறுநாள் காலையில் அந்தத் துறவியைப் பார்க்க அவர் தங்கியிருக்கும் குடிலுக்கு சென்றான்.

அங்கு ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்த துறவியைப் பார்த்து வணக்கம் தெரிவித்து விட்டு ஐயா என் பெயர் ரத்தினம் நான் இந்த ஊரில் தான் வசித்து வருகிறேன் ஐயா. எனக்குக் கடவுள் பக்தி மிகவும் அதிகம் நான் கடவுளை நம்புகிறேன். தினமும் எனது வீட்டில் கடவுளுக்குப் பூஜை நமஸ்காரங்கள் செய்கிறேன் தினமும் கோவிலுக்குச் செல்கிறேன் என்னால் முடிந்த அளவுக்கு அன்னதானங்கள் தான தர்மங்களை செய்கிறேன்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க…. எலுமிச்சை பழத்தில் இதை வைத்தால் போதும்

ஆனால் அந்தக் கடவுள் எனக்குக் கருணை காட்ட மாட்டேன் என்கிறார் எனது பெரிய மன குறையை அவர் போக்காமல் நான் படும் வேதனையை அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார். அதற்குத் துறவி உனது மன குறை தான் என்ன என்று கேட்டார். அதற்கு ரத்தினம் ஐயா எனக்கும் எனது மனைவிக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் எங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

நாங்கள் ஏறி இறங்காத கோவிலிலே இல்லை வழிபடாத தெய்வங்களே இல்லை ஆனால் இன்னும் எங்கள் குறை சரியாகவில்லை ஐயா. மிகவும் சக்தி வாய்ந்த இறைவனின் அருள் பெற்ற நீங்கள் எனது வீட்டிற்கு வருகை தந்து ஒருவேளை சாப்பாடு சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் நான் செய்த பாவம் எல்லாம் நீங்கி என் வாழ்க்கையில் நல்லது நடக்கும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று துறவி இடம் மிகவும் தாழ்மையாகவும் அன்பாகவும் கேட்டுக் கொண்டான். அவனது பேச்சைக் கேட்ட துறவிக்கும் அவன்மேல் இரக்கம் பிறந்தது சரி நாளை உன் வீட்டிற்கு நான் வருகிறேன் என்று கூறினார்.

அதைக் கேட்டு ரத்தினம் மிகவும் மகிழ்ச்சி அடைந்து துறவியிடம் நன்றியைத் தெரிவித்துவிட்டு வீடு திரும்பினான். பிறகு மறுநாள் காலையில் துறவிக்கு அருகில் உணவுகளைத் தயார் செய்ய வேண்டும் என வேலைகள் மிகவும் சுறுசுறுப்பாக ரத்தினத்தின் வீட்டில் நடந்து கொண்டிருந்தது அவரது மனைவி பல உணவுகளைத் தயார் செய்துகொண்டிருந்தாள். ரத்தினம் துறவியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.

அப்போது அங்குத் துறவியும் வந்துவிட்டார். ரத்தினமும் அவனது மனைவியும் அன்போடு வரவேற்றார்கள். துறவிக்கு முதலில் நீர் பருகக் கொடுத்தார்கள். துறவியும் தண்ணீர் குடித்துவிட்டு வீட்டைச் சுற்றிலும் முற்றிலும் பார்த்தார் வாழை இலையில் படையல் தயார் செய்து வைத்துவிட்டு துறவியைச் சாப்பிட அழைத்தான் ரத்தினம். துறவியும் சாப்பிட வந்து அமர்ந்தார்.

அப்போது துறவி ரத்தினம் நீயும் அமர்ந்து சாப்பிடு ஆமாம் உன் வீட்டில் நீயும் உனது மனைவியும் மட்டும்தானா வேறு யாரும் இல்லையா உனது அம்மா அப்பா எங்கே என்று கேட்டார். அதற்கு ரத்தினம் ஐயா எனக்கு அப்பா இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எனது அம்மா மட்டும்தான் இப்போது இருக்கிறார்கள் என்றான். அதற்குத் துறவி அப்படியா சரி உனது அம்மாவை இங்கே கூப்பிடு என்றார் அதற்கு ரத்தினம் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

இதையும் படிக்கலாமே: 27 நட்சத்திரங்களின் குணங்கள் மற்றும் ரகசியங்கள்

துறவியோ ரத்தினம் உன்னிடம் தான் கூறுகிறேன் உனது அம்மாவைக் கூப்பிடு இங்கே உணவு அருந்த அமரச் சொல் என்றார். அதற்கு ரத்தினமும் தயங்கியவரே ஐயா எனது அம்மா வீட்டில் இப்போது இல்லை என்று ஒருவித தயக்கத்துடன் கூறினான். ஏன் உனது அம்மா உனது சகோதரர்கள் யார் வீட்டிலாவது இருக்கிறார்களா என்று கேட்டார்.

அதற்கு ரத்தினம் ஐயா எனக்குச் சகோதரர்கள் என்று யாரும் இல்லை என்று கூறினான். பிறகு துறவி அப்படி என்றால் உனது அம்மா எங்கே உள்ளார்கள் என்று கேட்டார். அப்போது ரத்தினம் தயங்கியவரே ஐயா எனது அம்மாவைப் பக்கத்து ஊரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு உள்ளேன். அவர் அங்குத் தான் இருக்கிறார்கள் என்றான்.

அதைக் கேட்டு துறவியின் முகம் கோபத்தில் சிவந்தது சாப்பிட உட்கார்ந்து அவர் எழுந்து விட்டார் என்ன முதியோர் இல்லத்திலா. அவர் தங்க உன் வீட்டில் இடம் இல்லையா என்று கேட்டார். அதற்கு ரத்தினம் இல்லை ஐயா என் மனைவிக்கும் என் அம்மாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துவிடுகிறது ஏன் என்னிடமே ஏதாவது பேசி சண்டைக்கு வந்து விடுகிறார்கள் பேசாமல் இருங்கள் என்றால் கேட்காமல் ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

அதனால் அவர்களை வீட்டில் வைத்திருப்பது மிகவும் பிரச்சினையாக இருந்தது எனவே தான் நான் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு உள்ளேன். நான் மாதமாதம் அவர்களுக்குப் பணம் தருகிறேன் என்றான் ரத்தினம். அதைக் கேட்டு துறவிக்கு மேலும் கோபம் ஏற்பட்டது தாயை அவர்களின் வயதான காலத்தில் கூட இருந்து கவனித்துக் கொள்ளாமல் கைவிட்டு விட்டு பெரிய பாவத்தைச் செய்துவிட்டு நான் கோவிலுக்குப் போகிறேன் கடவுளைக் கும்பிடுகிறேன் தான தர்மங்கள் செய்கிறேன் என்று பெருமை எடுத்துக் கொள்கிறாய் பெற்ற தாயை அன்போடு கவனிக்காத நீ எத்தனை கோவில்களுக்குச் சென்றாலும் சரி எத்தனை தான தர்மங்களை செய்தாலும் சரி அதனால் ஒரு உபயோகமும் இல்லை.

இதில் இறைவன் மீது வேறு பழியை போடுகிறாய் வயதானவர்கள் என்றால் ஏதாவது பேசத்தான் செய்வார்கள் அவர்களின் பேச்சு அவர்களின் அனுபவத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். நன்மைக்காகத்தான் இருக்கும் அந்தப் பேச்சைக் கூட ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் சகிப்புத்தன்மை உனக்கு இல்லை. அன்புக்காகவும் பாசத்திற்காகவும் ஏங்கி தவித்துக் கொண்டிருக்கும் உனது அம்மாவைத் தனிமையில் விட்டு விட்டு இங்கு நீ கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறாய்.

இதையும் படிக்கலாமே: பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்

அதனால் என்ன பயன் நல்ல வேலை உனது வீட்டில் சாப்பிடுவதற்கு முன்பே உன்னைப் பற்றி எனக்குத் தெரிந்து விட்டது உன் பாவத்தைப் போக்க நீ என்னை உன் வீட்டிற்கு அழைத்தாய் உன் வீட்டிற்கு வந்து தண்ணீர் பருகிய நான் அந்தப் பாவத்தை எங்கு போய் கரைக்கப் போகிறேனோ என்று கோபமாகக் கூறிவிட்டு அவர் வீட்டை விட்டு கிளம்பினார். பிறகுதான் ரத்தினத்திற்கு தாம் எவ்வளவு பெரிய பாவம் செய்துவிட்டோம் என்பது புரிந்தது.

தனது அம்மாவை வீட்டிற்கு கூட்டி வந்து அன்போடு பாசத்தோடு கவனித்து வந்தான் இந்தக் கதையில் வருவது போல எத்தனை கோவில்களுக்குச் சென்றாலும் எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் எவ்வளவு தான தர்மங்கள் செய்தாலும் பெற்ற தாய் தந்தையரை கவனிக்கவில்லை என்றால் ஒரு உபயோகமும் இல்லை ஒரு புண்ணியமும் கிடைக்கப் போவதில்லை.

பெற்ற தாய் தந்தையர்களின் மனம் புண்படாமல் அவர்களை அன்போடு பாசத்தோடு கவனித்து வந்தாலே இறைவனின் அருள் தானாகவே கிடைக்கும். அதைவிட புண்ணியம் வேறு என்ன இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *