21 தலைமுறை பாவங்கள் போக்கும் கோவில், திருச்சி கோவில்கள்.

 

21 தலைமுறை பாவங்கள் போக்கும் கோவில், திருச்சி கோவில்கள்.

(Erumbeesvarar Temple, Trichy temples.)


தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது சனாதன தர்மத்தின் அடிப்படை. இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிரினங்களும் அனுபவிக்க கூடிய இன்பமும் துன்பமும் முன் வினைகளின் அதாவது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் பயனாகவே அனுபவிப்பதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. வினை பயன் என்பது ஒரு மனிதனின் நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பாகும். இப்படி நம்மை தொடரும் முன் ஜென்ம பாவங்களில் இருந்து விடுபடவும் அவைகள் நமது சந்ததிகளை பின்தொடராமல் இருக்கவும் குறிப்பிட்ட சில திருத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வது நிவர்த்தியை தரும்.


அந்த வகையில் 21 தலைமுறையில் செய்த பாவங்களையும் போக்கும் தளமாகவும் சேர் சோழ பாண்டியர்கள் திருப்பணி செய்த ஸ்தலமாகவும் திருநாவுக்கரசரால் தேவார பாடலில் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவில் வந்து வழிபட்ட தலமாகவும் விளங்கக்கூடிய ஒரு திருத்தலம் தான் அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலில் மூலவராக அருள்பாலிப்பவர் எம்பெருமான் ஈசனே ஆவார்.




இவருக்கு எறும்பீஸ்வரர் என்ற திருநாமம் வர என்ன காரணம் என்பதை இப்பொழுது பார்க்கலாம். ஒரு சமயம் தாரகாசுரன் எனும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். இந்திரனை தோற்கடித்து விண்ணுலகை கைப்பற்றினான். தோல்வியுற்ற இந்திரனோ பிரம்ம தேவனிடம் முறையிட அவர் இத்தலத்தில் குன்றின் மீது சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருலியிருப்பதாகவும் அவருக்கு மலர் வைத்து வழிபடுவதால் அசுரன் அழிக்கப்படுவான் என்றும் கூறினார். 


இதையும் படிக்கலாமே : அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.

அதன்படி தேவர்கள் இத்தலம் வந்தனர் அசுரனின் கண்ணில் படாமல் இருப்பதற்காக சிறிய எறும்பின் வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர் சிவனின் உச்சியில் மலர் வைக்க வானத்தின் மீது ஏறிய போது லிங்கம் வழவழப்பாகவும் செங்குத்தாகவும் இருந்ததால் அவர்களால் மேலே செல்ல இயலவில்லை. தேவர்கள் படும் துயரத்தை கண்ட எம் பெருமான் பரமேஸ்வரன் மண் புற்றாக தன் உருவத்தை மாற்றிக்கொண்டதோடு எறும்புகள் சறுக்கி விடாமல் எளிதில் ஏறும் வண்ணம் தமது திருமுடி சாய்த்து எறும்புகளுக்கு திருவருள் செய்தாராம். எனவேதான் இவர் எறும்பீஸ்வரர் என பெயர் பெற்றதாக இத்தல வரலாறு கூறுகிறது.




எறும்புகள் வழிபட்ட திருத்தலம் என்பதால் இது திருவெரும்பியூர் என்றாலே இன்று திருவெறும்பூர் திருவரம்பூர் என்று மருவி வழங்கப்படுகிறது. இங்கு சுயம்பு மூர்த்தியாக அருளும் ஈசனின் திருமேனி மத்தியில் ஒரு பிளவு உள்ளது இதனால் இந்த லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்து இருப்பது போல இருக்கும். இதில் வலப்புறம் உள்ள பகுதியை ஈசன் அம்சம் என்றும் இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு சிவ சக்தி லிங்கம் என்ற பெயரும் உண்டு. 

இன்றும் தினமும் இக்கோவிலில் நடைபெறும் பூஜைகளின் போது சுவாமிக்கு படைக்கப்படும் நெய்வேதிய பொருட்களை எறும்புகள் வரிசையாக வந்து எடுத்து செல்லும் என்றும் இது சிவபெருமானே எலும்புகள் வடிவில் வந்து தரிசனம் தருகிறார் என்றும் இத்தகைய நேரத்தில் சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பு என்றும் கூறுகிறார்கள். சிறு சிறு எறும்புகளுக்காக ஈசனே தலைசாய்ந்து பூஜைகளை ஏற்றுக்கொண்டார் என்பதிலிருந்து நன்றாக தெரிகிறது அல்லவா. யார் ஒருவர் ஈசனிடம் தலைவணங்கி தன்னை ஒப்புவித்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு ஈசனின் அன்பு நிச்சயம் உண்டு என்று.

முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை கொண்ட இத்தலத்தில் மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் அமைந்துள்ளதால் நேரடியாக அபிஷேகம் செய்யாமல் நீர் புகாதவாறு கவசம் பொருத்தியபின் அபிஷேகம் செய்யப்படுகின்றது. எறும்புகள் ஊறி செல்வதற்கு ஏதுவாக வடபுறம் சாய்மானமாக உள்ள ஈசன் திருமேனி மேற்புறம் சுறுசுறுப்பாக காணப்படுகிறது. சிவ லிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்களை இங்கு காணலாம்.


இதையும் படிக்கலாமே :

குலதெய்வத்தை இப்படி கும்பிட்டால் இவ்வளவு நன்மையா?| நமது வேண்டுதல் எளிதில் நிறைவேற எளிய பரிகாரம்!!

ஈசனின் மனம் கவர்ந்த நாயகியான அம்பிகை இத்திருத்தலத்தில் தெற்கு நோக்கியபடி அருள் பாலிக்கிறாள் இவள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருப்பதால் நறுங்குழல் நாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறாள். மன்மதனின் மனைவி ரதிதேவி தனக்கு உண்டான கர்வம் நீங்க இங்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றதாக கூறப்படுகிறது. இங்குள்ள பிரகாரத்தில் சொர்ணகால பைரவர் சன்னிதியும் அதன் எதிரே கஜலட்சுமி சன்னதியும் உள்ளன.


ஒரே சமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக்கொண்டால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. சிவனின் கருவறைக்கு முன்புள்ள துவார பாலகர்களில் ஒருவரின் முகம் கோபமாகவும் மற்றொருவரின் முகம் சாந்தமாகவும் இருப்பது வேறு எங்கும் இல்லாத ஓர் அமைப்பாகும். இது கோபம் ஆத்திரம் போன்ற உணர்வுகளோடு திரு கோவிலுக்கு வருபவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்ட பின்பு மிகவும் சாந்தமானவர்கள் ஆகிறார்கள் என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.



கருவறைக்கு பின்புறத்தில் சண்முகசுப்பிரமணியர் தனி சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கரம் இருக்கிறது சுவாமியையும் இந்த சக்கரத்தையும் சேர்த்து வணங்குபவர்களுக்கு எத்தகைய தோஷங்களும் தீரும் என்பது திடமான நம்பிக்கையாகும். எறும்புகளுக்கு மனம் இறங்கி அருள் செய்த எறும்பீஸ்வர பெருமான் இங்கு வந்து வேண்டிக் கொள்ளும் சகலருக்கும் வேண்டியதை கொடுப்பான் என்கிறார்கள்.


தேவர்கள் எறும்புகளாக உருக்கொண்டு வந்து வெளிப்பட்ட ஸ்தலம் என்பதால் இங்கு வந்து வழிபடுவோருக்கு சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாவதோடு மனக்கவலைகளும் நீங்கி உற்சாகம் பிறக்கும் என்கிறார்கள். இந்த கோவிலின் தலவிருட்சமாக வில்வமும் 21 தலைமுறைகளில் செய்த பாவங்களை தீர்க்கக்கூடிய பிரம்ம தீர்த்தமும் உள்ளது தேவர்களின் பாவங்களை நீக்கிய தலம் என்பதால் இங்கு வந்து வணங்க நாம் செய்த பாவங்கள் யாவும் விலகி நலம் உண்டாகும் என்பது நம்பிக்கை.


இதையும் படிக்கலாமே :

ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்? யார் போக வேண்டும்?

பிரம்ம தீர்த்ததோடு இங்கு பதும தீர்த்தம் மது தீர்த்தம் குமார தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன சுமார் 250 அடி உயரம் உள்ள குன்றின் மீது தான் எறும்பீஸ்வரர்  திருக்கோவில் அமைந்துள்ளது. கிழக்கு நுழைவு வாசலில் இடதுபுறம் செல்வ விநாயகரும் வலது புறம் ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர். கொடிமரம் பலிபீடம் நந்தி மண்டபம் தாண்டி கருவறைக்கு முன் முக மண்டபமும் அதையொட்டி திரிச்சுற்றும் உள்ளன கருவறையின் வெளிப்புற சுவரில் நர்த்தன விநாயகர் தட்சணாமூர்த்தி பிரம்மா துர்க்கை ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தளம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் திருவெறும்பூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.இந்த திருவெறும்பூர்.


இந்திரனும் தேவர்களும் பூஜை செய்து வணங்கி அருள் பெற்ற எறும்பீஸ்வரரை நாம் தரிசித்து நாமும் நமது 21 தலைமுறையினரும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களில் இருந்து விடுபட மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டு எறும்பீசனின் அருளை பெறுவோம். நன்றி..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *